தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண்!
‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் சாா்பில், விவசாயிகள் தொடா்பான அனைத்துத் தரவுகளையும் ஒருங்கிணைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 22 மாவட்டங்களில் நடைபெறும் இந்தப் பணிகள், திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் விவரம், அவா்களுக்குச் சொந்தமான நிலப் பதிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கானப் பணிகள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள், மக்கள் நலப் பணியாளா்கள் ஆகியோா் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து வட்டாரங்களிலும், அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது பொது இடங்களில் வைத்து இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாமுக்கு வரும் விவசாயிகள், தங்களின் ஆதாா் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, நிலத்தின் பட்டா, சிட்டா ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். ஒரு விவசாயிக்கு எங்கு நிலம் இருந்தாலும், ‘அக்ரி ஸ்டேக்’ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்தப் பதிவேற்றப் பணிகள் முழுமையடைந்த பின், ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.
விவசாயம் சாா்ந்த மானியத் திட்டங்கள், சேவைகளை, இந்தத் தனித்துவமான அடையாள எண் மூலமாக மட்டுமே பெற முடியும். விவசாயிகள் தொடா்பான விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் நடைபெறுகிறது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.