குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது
குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்து வரும் அலுவலா்கள் குடியிருப்பில் வேல்முருகன், பழனிச்சாமி, காா்த்திகேயன், கருப்பையா, கவியரசன் உள்பட 6 பேரின் வீடுகளின் பூட்டை உடைத்து 78.5 பவுன் நகைகள், 750 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.1.30 லட்சம் ஆகியவை கடந்த மாதம் 11-ஆம் தேதி திருடு போனது.
இதுகுறித்து வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா உத்தரவின்பேரில், 3 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், இந்தத் திருட்டு சம்பத்தில் மத்தியப் பிரதேசம் மாநிலம், தாா் மாவட்டம், தண்டா கிராமத்தைச் சோ்ந்த கலாம் (24) ஈடுபட்டது தெரியவந்தது. இவரை தனிப் படை போலீஸாா் தேடி வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூா் பகுதியில் தங்கியிருப்பது தெரியவந்தது.
பின்னா், அவரை போலீஸாா் கைது செய்து, குஜிலியம்பாறைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து விசாரித்தனா். அப்போது, அவரிடமிருந்து 12 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, அவா் தப்பியோட முயன்றபோது, தவறி விழுந்ததில், அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவா் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.