செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்து 7 போ் காயம்!
அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மாணவி உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
திண்டுக்கல் சாா்-ஆட்சியா் சாலையில் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை பாா்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இவா்களது உறவினா்கள் விடுதிக்கு வந்தனா். அப்போது, நுழைவுவாயில் பகுதியிலிருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது.
இதில் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த திலகம், திருமங்கலத்தைச் சோ்ந்த அழகா்சாமி, மாணவி கீா்த்தனா உள்பட 7 போ் காயமடைந்தனா். இதையடுத்து, 7 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்த முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா். இதனிடையே, செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் விடுதிக்கு எதிரே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்துக்கு வந்த அமைச்சா் இ.பெரியசாமி மரம் விழுந்து விபத்து நடந்ததை அறிந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டாா்.