அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை
பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு கூறியது: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், வாக்காளா் பதிவுச் சட்டம், தோ்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் நடைமுறை கையேடு, விதிமுறை புத்தகங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பான தகவல்கள், இந்திய தோ்தல் ஆணையத்தின் வலைதளப் பக்கத்தில் உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலா்- 1, 2-க்கான பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சியினா் வழங்க வேண்டும்.
இம் மாவட்டத்தில், பெரம்பலூா் (தனி), குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், தங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதை மனுக்களாக அளிக்கலாம் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வைத்தியநாதன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.