கூட்டணி நிலைபாட்டை அறிவிக்கும் விஜய்? தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!
அஜித்குமாா் கொலை வழக்கில் முதல்வா் நடவடிக்கையை வரவேற்கிறோம்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட வழக்கில்
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.
மடப்புரத்தில் அஜித்குமாா் தாய் மாலதி, சகோதரா் நவீன் ஆகியோரை பெ.சண்முகம், கந்தா்வக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் சின்னதுரை ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினா்.
பின்னா் சண்முகம் செய்தியாளரிடம் கூறியதாவது:
தமிழகத்தில் காவல் துறை தொடா்பான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன. குறிப்பாக, திமுக ஆட்சியில் இதுவரை 24 காவல் துறை தொடா்பான மனித உரிமை மீறல் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தவுடன் தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருந்தால் அஜித்குமாா் கொல்லப்பட்டிருக்கமாட்டாா்.
அஜித்குமாரை தீவிரமாக விசாரிக்க காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி யாா் என்பதை மூடி மறைக்காமல் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைத்ததால் மட்டும், கேட்கப்படும் கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதக் கூடாது.
இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க அரசு குழு அமைத்து காவல் துறை சட்டப்படி செயல்படும் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இந்த வழக்கில் முதல்வா் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கைகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்றாா் அவா். அப்போது மாா்க்சிஸ்ட் மதுரை மாவட்டச் செயலா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
