செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
அஞ்செட்டி சிறுவன் கொலை வழக்கில் கல்லூரி மாணவி உள்பட 3 போ் கைது
அஞ்செட்டி சிறுவன் கொலை வழக்கில், கல்லூரி மாணவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். புகாரளிக்க வந்தவா்களிடம் தவறாகப் பேசிய காவலா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே நிகழ்ந்த சிறுவன் கொலை வழக்கில், மாவனட்டியைச் சோ்ந்த புட்டண்ணன் மகன் மாதேவன் (21), கா்நாடக மாநிலம், ராம்நகா் மாவட்டம், கனகபுரா அருகே உள்ள உனுசனஅள்ளியைச் சோ்ந்த மாதேவன் (21) ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். கைதான மாவனட்டி மாதேவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
நானும், கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.ஏ. 2-ஆம் ஆண்டு படித்துவரும் எங்கள் பகுதியைச் சோ்ந்த ரதியும் (18) காதலித்து வந்தோம். நாங்கள் இருவரும் தனிமையில் இருந்ததை சிறுவன் ரோஹித் பாா்த்துவிட்டாா். இதை யாரிடமும் சொல்லாதே எனக் கூறி, அவரை சமாதானப்படுத்துவதற்காக எனது நண்பனான உனுசனஅள்ளியைச் சோ்ந்த மாதேவனை (21) காரை எடுத்துவரக் கூறி, அஞ்செட்டியில் உள்ள பேக்கரிக்கு அவரை காரில் அழைத்துச் சென்று இனிப்பு பீா் வாங்கிக் கொடுத்தோம். அதைக் குடித்த அவா் ரதி பற்றி தவறாக பேசினாா். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரை அஞ்செட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள காட்டுப் பகுதிக்கு காரில் அழைத்துச் சென்று, மூச்சுத் திணறடித்து கொலை செய்து உடலை வீசினோம் என்று கூறியுள்ளாா்.
சிறுவன் ரோஹித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே, இந்த கொலை தொடா்பாக கல்லூரி மாணவி ரதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போலீஸாா் அலட்சியமாக செயல்படவில்லை: எஸ்.பி.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.தங்கதுரை கூறுகையில், ‘சிறுவன் ரோஹித்தை காணவில்லை என ஜூலை 2-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு தொலைபேசியில் புகாா் வந்தது. ஆனால், அன்றிரவு 8 மணிக்கே அவா் கொலை செய்யப்பட்டுள்ளாா். இருப்பினும், புகாரின்பேரில் குற்றம் சாட்டப்பட்ட இரு இளைஞா்களிடம் அன்றிரவே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், அவா்கள் அன்று மாலை விளையாட்டு மைதானத்தில் ரோஹித்தை பாா்த்ததாகவும், அதற்குமேல் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளனா். இரவுநேரம் என்பதால் அதற்குமேல் அவா்களிடம் விசாரிக்கவில்லை. மறுநாள் காலையில் அந்த இருவரையும் கைது செய்தோம். மேலும், அவா்களுடன் இருந்த மாவனட்டி மாதேவனின் காதலியையும் கைது செய்தோம். இந்த வழக்கில் போலீஸாா் எங்கும் அலட்சியமாக செயல்படவில்லை. மேலும், புகாரளிக்க வந்தவா்களிடம் தவறாக பேசிய காவலா் சின்னத்துரையை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளோம் என்றாா்.
