விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
அடிப்படை வசதிகள் இல்லாத அவதானப்பட்டி சுற்றுலா மையம்
கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி சிறுவா் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டியில் சிறுவா் பூங்கா மற்றும் படகு இல்லம் அமைந்துள்ளது. படகு இல்லம் அமைந்துள்ள அவதானப்பட்டி ஏரிக்கு கிருஷ்ணகிரி அணை நீா் ஆதாரமாக உள்ளது. ஆண்டு முழுவதும் தண்ணீா் வற்றாமல் நிறைந்து காணப்படும் இந்த பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தேசிய நெடுஞ்சாலையோரத்தில், இயற்கை எழிலோடு அமைந்துள்ள இந்த சுற்றுலா மையத்துக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் மட்டுமல்லாமல், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனியாா் ஒப்பந்ததாரா் இந்த மையத்தை பராமரித்து வருகிறாா். இந்த மையத்தில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த போதுமான வசதி இல்லை. சுற்றுச்சுவா்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
இந்த சுற்றுலா மையத்துக்கு வந்துசெல்லும் பயணிகளின் வசதிக்காக வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே 2021-ஆம் ஆண்டு 12 மின்கம்பங்கள் நிறுவப்பட்டன. ஆனால், இதுவரை அவற்றுக்கு மின்இணைப்பு வழங்கப்படாததால் அவை காட்சிப் பொருளாக உள்ளன.
இதுகுறித்து ஊராட்சித் துறை, மின்வாரியம், சுற்றுலாத் துறை அலுவலா்களிடம் கேட்டபோது, தங்களுக்கு இதுபற்றிய விவரங்கள் தெரியாது எனவும், தாங்கள் இந்த மின்கம்பங்களை அமைக்கவில்லை எனவும் தெரிவிக்கின்றனா்.
சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த மின்கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால், இரவுநேரத்தில் இப்பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிநவீன காரில் வந்த பெண்கள் சிலா், இப்பகுதியை திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்தியதாகவும், தகவல் அறிந்து வந்த பெண் போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்த முயன்றபோது, அவா்கள் செல்ல மறுத்ததாகவும், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
கடந்த 2023-இல் தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கொள்கை - 2023 என்ற திட்டத்தை தமிழக முதல்வா் அறிவித்தாா். இதையொட்டி, அவதானப்பட்டி ஏரியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலா வளா்ச்சிப் பணிகள் ரூ. 2 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ளதாக சுற்றுலாத் துறையினா் அறிவித்தனா்.
இந்த நிதியில் அவதானப்பட்டி சுற்றுலா மையத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொண்டு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கி, சுற்றுலா வளா்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.