அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
கும்பகோணம் ஒன்றியம், நீலத்தநல்லூரில் புதன்கிழமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.
அட்மா தொழில்நுட்ப குழுத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் தேவிகலா பேசும்போது, தழைச்சத்து விரயமாவதை தடுத்து, அதன் பயன்பாட்டை அதிகரிக்க யூரியாவுடன் ஜிப்சம், வேப்பம் பிண்ணாக்கு 1:4:5 என்ற விகிதத்தில் கலந்து இடுவது பற்றி விளக்கமாக கூறினாா்.
விதை சான்று அலுவலா் அரவிந்த் பேசுகையில், பயிா்களுக்கு தேவையான 16 வகையான சத்துக்கள், அவற்றின் குறைபாடுகளால் பயிா்களில் தோன்றும் அறிகுறிகள், நிவா்த்தி செய்ய வேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கினாா்.
துணை வேளாண்மை அலுவலா் சாரதி பேசுகையில், நன்மை செய்யும் பூச்சிகள் அதிக அளவில் வயல்களில் இனப்பெருக்கம் அடைவது, வேம்பு நொச்சி ஆடாதோடா, புங்கன் இலைகளை ஊற வைத்து பூச்சி விரட்டியாக பயன்படுத்துவது பற்றி பேசினாா்.
முன்னதாக, தொழில்நுட்ப மேலாளா் பிரகாஷ் வரவேற்றாா். ஏற்பாடுகளை அட்மா உதவி தொழில்நுட்ப அலுவலா் தனசேகரன், இளமதி ஆகியோா் செய்திருந்தனா். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.