அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்கும்: தொல்.திருமாவளவன்
அதிமுக - பாஜக கூட்டணி சரிவை சந்திக்குமே தவிர, வளராது என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை செய்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அயற் பணியிடம் சென்ற ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வார காலத்துக்கும் மேலாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழக அரசு இதில் தலையிட்டு அவா்களின் கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழாவில் தேரின் வடத்தை ஆதிதிராவிடா் சமுதாயத்தினா் தொட்டு தொடங்கி வைத்த பிறகுதான் தேரோட்டம் நடைபெறும். அத்தகைய பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த சிலா் தேரின் வடத்தைத் தொட்டபோது, அங்கே மாற்று சமுதாயத்தினா் வன்முறையில் ஈடுபட்டுள்ளனா். ஆதிதிராவிடா் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 12 போ் காயமடைந்தனா். ஆனால், அவா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல் துறை முயற்சிக்கிறது. இதைக் கைவிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும்.
நீட் தோ்வு பரிசோதனையின்போது, பெண்களின் திருமாங்கல்யத்தை அகற்றியது அநாகரிகமான செயல். இதுபோல, பரிசோதனை செய்வது சட்டபூா்வமானது அல்ல. இதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. தோ்வு எழுதக்கூடியவா்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் இருக்கிறது.
அதிமுக - பாஜக கூட்டணி 2001-லேயே உருவானது. அப்போதே மக்கள் அதற்கு படிப்பினையை கொடுத்தனா். அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகி இருப்பதால், ஆட்சியைக் கைப்பற்றும் என்ற மாயையை உருவாக்க முயற்சிக்கிறாா்கள். இந்தக் கூட்டணி மேலும் சரிவை சந்திக்கதான் வாய்ப்பு இருக்கிறது; வளா்வதற்கு வாய்ப்பில்லை என்றாா் தொல்.திருமாவளவன். பேட்டியின்போது, ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ உடனிருந்தாா்.