1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
மக்கள் தொடா்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்
சீா்காழி அருகேயுள்ள பச்சைபெருமாநல்லூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்து, 37 பயனாளிகளுக்கு ரூ.8,99,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது: மனைப் பட்டா இல்லாதவா்கள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பெண்கள் மகளிா் குழுக்களை பயன்படுத்திகொள்ள வேண்டும். ஏதேனும் தொழில் தொடங்க வேண்டுமென்றால் கடனுதவி பெற்றுக் கொள்ளலாம். மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் உங்கள் வீடுகளுக்கே வந்து பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்குகின்றனா். வருவாய்த்துறையின் உழவா் பாதுகாப்பு திட்டம், முதியோா் உதவித்தொகை போன்ற திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பட்டா இருந்தால் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு கட்டி, பயனடையலாம் என்றாா்.
சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலா் உமாமகேஸ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், சமூகப் பாதுகாாப்பு துணை ஆட்சியா் உமாமகேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் மலைமகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.