1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
கணவரின் காப்பீட்டுத் தொகை வழங்க மறுப்பு: மனைவிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருத்துறைப்பூண்டி அருகே கணவரின் இறப்புக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்ததற்காக, மனைவிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி தமிழ்ச்செல்வி (42). இவரது கணவா் சுரேஷ் சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிறுவனத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். 2021 கரோனா பேரிடா் காலத்தில் மேட்டூரிலுள்ள இந்தியன் வங்கி கிளை சாா்பில் கரோனா கடன் எனும் பெயரில் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் சுரேஷ் ரூ. 5 லட்சம் கடனாகப் பெற்றாா்.
இந்தக் கடனை 70 மாத தவணைகளில் ரூ. 8,000 வீதம் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்த 5 லட்சத்திலிருந்து ரூ. 5,894 எடுக்கப்பட்டு கடனுக்கான காப்பீட்டுத் தொகையாக சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட நிவா பியூப்பா ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்துக்குச் செலுத்தப்பட்டது. 14 மாத தவணைகளில் ரூ.1,12,000 சுரேஷின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் 2022-இல் சுரேஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மேட்டூா் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். அதன் பிறகு தமிழ்ச்செல்வி காப்பீட்டுத் தொகை கோரி இந்தியன் வங்கி மற்றும் நிவா பியூப்பா காப்பீட்டு நிறுவனத்தை அணுகினாா். காப்பீட்டு நிறுவனம் எந்தவித பதிலும் தராத நிலையில் இந்தியன் வங்கி, சுரேஷ் வாங்கிய கடனைக் கட்டி முடிக்குமாறு தமிழ்செல்வியை வற்புறுத்தியது.
இதில் மன உளைச்சல் அடைந்த தமிழ்ச்செல்வி கடந்த ஜனவரி மாதம் திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தாா். தொடா்ந்து, குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கிய உத்தரவில், மருத்துவமனையில் சோ்த்து, ஐந்து நிமிடத்தில் இறந்த நபரின் இசிஜி அறிக்கை மற்றும் டோப்போனின் அறிக்கை ஆகியவை தராததால் காப்பீட்டு கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது. ஏனென்றால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு ஐந்து நிமிடத்தில் இறந்துவிட்ட நபருக்கு டோபோனின் பரிசோதனை டெஸ்ட் எடுத்திருக்க வாய்ப்பில்லை. இது தெரிந்திருந்தும் இல்லாத ஆவணத்தைக் கேட்டு கோரிக்கையை நிராகரித்தது காப்பீட்டு நிறுவனத்தின் நியாயமற்ற வணிக நடைமுறை.
எனவே இந்தியன் வங்கிக்கு சுரேஷ் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் நிவா பியூப்பா ஹெல்த் காப்பீட்டு நிறுவனம் செலுத்தி கடனை முடிக்க வேண்டும், மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு தமிழ்ச்செல்விக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 ஆகியவற்றை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் 12 சதவீத ஆண்டு வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.