திருவீழிமிழலை கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
திருவாரூா் மாவட்டம், திருவீழிமிழலை சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி தினசரி பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, மாப்பிள்ளை சுவாமி கயிலாயத்திலிருந்து படியிறங்கி, கல்யாண மண்டபத்துக்கு எழுந்தருளினாா். தொடா்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீகல்யாண சுந்தரருக்கும், காா்த்தியாயினி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, மணமக்கள் இருவரும் தங்களின் பரிவாரங்களுடன் ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில், திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.