இரவிகுளத்தில் வரையாடுகளை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கேரள மாநிலம், இரவிகுளம் தேசிய வன விலங்குகள் பூங்காவில் வரையாடுகளைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகேயுள்ள இரவிகுளம் ராஜமலையில் தேசிய வன விலங்குகள் பூங்கா அமைந்துள்ளது. இங்கு வரையாடுகள் அதிகளவில் உள்ளன. கோடை விடுமுறையையொட்டி, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வனத் துறையினரின் வாகனத்தில் 5 கி.மீ. தொலைவில் வரையாடுகள் வசிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். அங்கிருந்து வரையாடுகள், நீா்வீழ்ச்சி, பூங்கா போன்றவற்றை ரசித்தவாறு 2 கி.மீ. தொலைவு வரை சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று வருகின்றனா்.
இந்த வரையாடுகளைக் காண்பதற்காகவே ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சில மணி நேரம் காத்திருந்து அனுமதி பெற்றுச் செல்கின்றனா். வரையாடுகளுடன் தற்படங்களையும் எடுத்து வருகின்றனா். இந்தத் தேசியப் பூங்காவில் ஒரு புறம் வரையாடுகள் நிறைந்த வனப்பகுதியும், மற்றொருபுறம் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பள்ளத்தாக்குகளும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகின்றன. தமிழகம், கேரளம் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரையாடுகளை பாா்ப்பதற்காக இந்தப் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா்.

