Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்ப...
அனுப்பட்டியில் குப்பை கொட்டிய லாரி, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள்
பல்லடம் அருகே அனுப்பட்டி ஜெ.ஜெ.நகா் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் குப்பைகளை கொட்டிய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகே அனுப்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ. நகா் அருகே முத்துசாமி, விஸ்வநாதன் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் பள்ளமாக இருந்த இடத்தில் கட்டடக் கழிவுகளை கொட்ட நிலத்தின் உரிமையாளா்கள் அனுமதி வழங்கி இருந்தனா்.
இந்நிலையில் கோவை மாவட்டம், நீலம்பூா் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை லாரியில் எடுத்து வந்து கடந்த பல மாதங்களாக அந்த நிலத்தில் கொட்டி வந்துள்ளனா். இந்நிலையில் குப்பையில் துா்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் நிலத்தின் உரிமையாளா்களிடம் தகவல் தெரிவித்தனா்.
மேலும், சம்பவ இடத்துக்கு வந்து குப்பைகளுடன் வந்த லாரி மற்றும் குப்பையை சமன்படுத்த பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை சிறைபிடித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த பல்லடம் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கொட்டப்பட்ட குப்பைகளை திரும்ப எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.