அனுமதி பெறாத CBSE பள்ளி; தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவர்கள்... ஏற்பாடு செய்த ஆட்சியர்!
`10-ம் வகுப்பு' அனுமதி பெறாத தனியார் CBSE பள்ளி
பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்காடு பகுதியில் பிரைம் என்ற பெயரில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி நிர்வாகம் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், உரிய அங்கீகாரம் இல்லாமல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களை சேர்த்துள்ளனர் இப்பள்ளி நிர்வாகத்தினர். 10ம் வகுப்பில் 16 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகள் என மொத்தம் 19 பேர் படித்து வந்தனர். அவ்வப்போது சில பெற்றோர் பத்தாம் வகுப்பு நடத்துவதற்கு நீங்கள் அனுமதி பெறவில்லை என தெரிய வருகிறது எப்படி எங்க பிள்ளைகளை தேர்வு எழுத வைப்பீங்க என கேட்டுள்ளனர்.
அதற்கு, பள்ளி நிர்வாகம் பல்வேறு காரணத்தைச் சொல்லி சமாளித்துள்ளனர். இந்த நிலையில், பிப்.15ம் தேதி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் 19 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை.

கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை...
தேர்வெழுத மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்காததால், மாணவர்களும், பெற்றோர்களும் கலக்கம் அடைந்தனர். இதையடுத்து, கடந்த 14-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு வந்து சி.பி.எஸ்.சி அனுமதியின்றி பள்ளி செயல்பட்டதையும், மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்காதது குறித்தும் ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் முறையிட்டனர்.
"எங்க பிள்ளைகளின் ஒரு வருட படிப்பை நாங்களே வீணடித்து விட்டோம், எப்படியாவது தேர்வு எழுதுவதற்கு அனுமதி பெற்றுக் கொடுங்கள்" என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
ஆட்சியர் நடவடிக்கை
இது குறித்து ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார். மேலும், சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாததால் 10-ம் வகுப்பு தேர்வை எழுத முடியாத நிலைக்கு மாணவர்கள் ஆளாகியிருப்பது உறுதியானது. இதையடுத்து, வேறொரு பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் பெற்று NIOS (நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூல்) திட்டம் மூலம் தனியாக இந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை வரும் மார்ச் மாதம் விண்ணப்பம் செய்து, ஜூன் மாதம் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

மாணவர்களின் பெற்ரோர், பீஸ் கட்டி படிக்க வைத்தோம். ஆனால் அந்த பள்ளி எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி நிறுத்தியிருக்கிறது. பிள்ளைகளோட ஒரு வருட படிப்பு பாதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் பலவிதமான சிக்கல்களுக்கு ஆளாவதற்கான வாய்ப்புள்ளதாக பெற்றோர் புலம்பினர். அவர்களது நிலையை அறிந்த ஆட்சியர் பிரியங்கா, சமச்சீர் கல்வி மூலம் நடத்தப்படும் மாநிலக் கல்வி வாரியத் தேர்வு எழுதுவதற்கு 19 மாணவர்களுக்கும் சிறப்பு விதிகள் பெற்றுக் கொடுப்பதற்காகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியவர் அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொடுத்தார்.
மாணவர்கள் மீது தனி கவனம்..
இதன்படி, 19 மாணவர்களும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், சேர்க்கப்பட்டனர். நேற்றிலிருந்து அவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு மாநிலப் பாடத்திட்டத்தில், தேர்வு எழுதும் வகையில், தனி வகுப்பு அறையை உருவாக்கி, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர். வெவ்வேறு சிலபஸ் என்பதால் மாணவர்கள் கொஞ்சம் சிரமத்தை சந்திப்பார்கள் என்பதால் ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சொல்லியிருக்கிறார்.

"அம்மா, நகையை அடகு வச்சு படிக்க வச்சு ஆளாக்கினார். அதனால் தான் நான் இன்றைக்கு கலெக்டராக இருக்கிறேன். அம்மாவுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அம்மா பெயரை என் பெயருக்கு பின்னால் போடுறேன்" என்று சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலெக்டர் பேசியது பலரையும் நெகிழ வைத்தது. படிப்பின் அவசியத்தை உணர்ந்த கலெக்டர் ஒரு தாயாக இதை அணுகி எங்க பிள்ளைகளின் படிப்பு தடைபாடாத வகையில் நடவடிக்கை எடுத்திருக்கிறார். மாணவர்களை நல்ல மதிப்பெண் எடுக்க வைத்து தேர்ச்சி பெற வைப்பதாக ஆசிரியர்களும் சொல்லியுள்ளார். இப்பதான் நாங்க நிம்மதி பெருமூச்சு விடுறோம். இதே போல் எங்களையும், பிள்ளைகளையும் தவிக்க வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.