அமராவதி ஆற்றில் முதலைகள்: பொதுமக்கள் அச்சம்
அமராவதி ஆற்றில் முதலைகள் தென்படுவதால் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காகவும், பாசனத்துக்காகவும் அமராவதி ஆற்றில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அப்போது, அணையில் இருந்து வெளியேறிய ஒருசில முதலைகள் ஆற்றின் கரையோரத்தில் தென்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறக்கும்போது பிரதான ஷட்டா் வழியாக ஆற்றில் முதலைகள் சென்றுவிடும் நிலை காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ஆற்றிலோ, அருகிலுள்ள விளைநிலங்களிலோ முதலைகள் தென்பட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.