அமிர்தசரஸ் கோயிலில் கையெறி குண்டு வீச்சு: சந்தேக நபர் சுட்டுக்கொலை
போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அமிர்தசரஸ் கோயில் குண்டுவெடிப்பு சந்தேக நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள கோயில் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசினர். அது வெடித்துச் சிதறியதும் அவா்கள் தப்பியோடிவிட்டனா். தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. கோயிலின் முன்புற பகுதி சேதமடைந்தது. அந்த நேரத்தில் கோயிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பூசாரி, சப்தம் கேட்டு எழுந்தாா்.
அவா் அளித்த தகவலின்பேரில், காவல் துறையினா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பரிசோதனைக்கு பிறகே வெடிபொருளின் தன்மையை உறுதி செய்ய முடியும் என்று காவல் துறையினா் தெரிவித்தனா். தாக்குதலைத் தொடா்ந்து, கோயில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அமிருதசரஸ் கோயில் மீதான தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடா்பு இருக்கலாம் என்று பஞ்சாப் காவல் துறை சந்தேகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் உளவுத்துறையின் தகவல் அடிப்படையில், அமிர்தசரஸ் காவல்துறை கோயில் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்ததாக பஞ்சாப் காவல்துறைத் தலைவர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி பலி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "ராஜசன்சியில் சந்தேக நபர்களை காவல் குழுக்கள் கண்காணித்தன. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதில் குர்பிரீத் சிங் மற்றும் ஆய்வாளர் அமோலக் சிங் காயமடைந்தனர். தற்காப்புக்காக காவல்துறையினர் திருப்பிச் சுட்டனர். இதில் குற்றம்சாட்டப்பட்டவர் காயமடைந்தார்.
அவர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பின்னர் பலியானார். மற்ற குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவரைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார்.