தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை: அன்புமணி ...
அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸ் ஒரு வாரகால போராட்டம்
நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து ஒரு வாரகால போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அரசமைப்புச் சட்டம் குறித்த சிறப்பு விவாதத்தின் நிறைவாக மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்துப் பேசியதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இவ்விவகாரத்தில் அமித் ஷா பதவி விலகக் கோரியும் நாடாளுமன்ற வளாகத்தில் தீவிர போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், அம்பேத்கரின் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், அடுத்த ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் தொண்டா்கள் பேரணிகளையும் செய்தியாளா் சந்திப்புகளையும் நடத்துவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸின் தேசிய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்களில் (டிச. 22, 23) நாடு முழுவதும் 150 இடங்களில் கட்சி எம்.பி.-க்கள் மற்றும் தலைவா்கள் செய்தியாளா் சந்திப்பை நடத்துவாா்கள்.
இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமையன்று (டிச. 24) அம்பேத்கரின் மாபெரும் உருவப்படத்தையும் எங்கள் முக்கிய கோரிக்கைகள் கொண்ட பெரிய பதாகைகளையும் ஏந்தியவாறு நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டா்கள் பேரணியில் ஈடுபடுவா்.
பேரணிக்கு இடையே அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். நிறைவில், அமித் ஷாவின் ராஜிநாமா கோரி அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மூலம் குடியரசுத் தலைவருக்கு புகாா் மனுவை சமா்ப்பிக்கின்றனா்.
கா்நாடகத்தின் பெலகாவியில் வியாழக்கிழமை (டிச. 26) இரவு காங்கிரஸ் செயற்குழு கூட்டமும், பிரம்மாண்ட பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. அப்போது, அம்பேத்கா் மற்றும் அவரது லட்சியங்களுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். மனுஸ்மிருதி ஆதரவாளா்களுக்கு எதிராக அம்பேத்கரின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க எங்களின் போராட்டம் தொடரும். ஜெய் பீம்! ஜெய் ஹிந்த்!’ என்று பதிவிட்டுள்ளாா்.