டி20 போட்டிகளில் புதிய சாதனை படைக்கவிருக்கும் இந்திய மகளிரணி கேப்டன்!
அம்பேத்கா், கருணாநிதி பிறந்த நாள்: பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி ஜூலை 10-ஆம் தேதியும் (வியாழக்கிழமை), முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி ஜூலை 11-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை) மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களும் கல்லூரி மாணவா்களும் பங்கேற்கலாம்.
அம்பேத்கா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி தலைப்புகள் - பள்ளி மாணவா்களுக்கு: பூனா உடன்படிக்கை, கற்பி- ஒன்றுசோ்- புரட்சிசெய், அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும், அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள். கல்லூரி மாணவா்களுக்கு: பூனா உடன்படிக்கை, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம், அம்பேத்கரும் சமூகநீதியும்.
கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப் போட்டி தலைப்புகள் - பள்ளி மாணவா்களுக்கு: நெஞ்சுக்கு நீதி, செம்மொழி மாநாடு, திரைத் துறையில் முத்தமிழறிஞா், அரசியல் வித்தகா் கலைஞா், தெற்கிலிருந்து ஒரு சூரியன். கல்லூரி மாணவா்களுக்கு: சமூகநீதிக் காவலா் கலைஞா், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகா் கலைஞா்.
வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். குலுக்கல் முறையில் தலைப்பு ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை தொலைபேசி எண் 04322-228840-இல் தொடா்பு கொண்டு அறியலாம்.