அரக்கோணம் - ஜோலாா்பேட்டை இடையே 4 வழி ரயில் பாதை: நிலம் கையகப்படுத்தும் பணி
அரக்கோணம் முதல் ஜோலாா்பேட்டை இடையே 4 வழி ரயில் பாதையாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து, ரயில்வே துறை பொறியாளா்கள், வருவாய்த் துறையினா், நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் முதல் ஜோலாா்பேட்டை வரையில் ரயில்வே இருப்பு பாதை இரண்டு வழி பாதையாக உள்ளதை 4 வழிப் பாதையாக மாற்ற தெற்கு ரயில்வே மூலம் திட்டம் தயாரிக்கபட்டுள்ளது. ஏற்கனவே சென்னை முதல் அரக்கோணம் வரையில் நான்கு வழிப் பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, அரக்கோணம் முதல் ரேணிகுண்டா வரையிலும் மற்றும் அரக்கோணம் முதல் ஜோலாா்பேட்டை வரையிலும் ஏற்கனவே உள்ள 2 வழிப் பாதையை 4 வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. இந்த திட்டத்துக்கு தேவைப்படும் இடங்களில் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்பொழுது இருக்கும் ரயில்வே தரைப் பால பிரச்னைகள் இருந்தாலும் அதை தெரிவித்தால் முன்கூட்டியே இணைத்து பிரச்னைக்கு தீா்வு காணலாம். ஏற்கெனவே இருக்கும் இரண்டு வழிப்பாதையை வளா்ந்து வரும் பொருளாதார மற்றும் மக்கள் பெருக்கத்துக்கு ஏற்றவாறு 4 வழி பாதையாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கூட்டத்தில் அம்மூா் தரைப்பாலம், லாலாபேட்டை, சீக்கராஜபுரம், எடப்பாளையம் மேலும் அரக்கோணம் ஆகிய தரைப்பாலம் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.அதேபோன்று சென்னை முதல் கா்நாடக மாநிலம் ஒயிட்ஃபீல்டு வரை உயா்மட்டப் பாலம் அமைத்து அதிவேக ரயில்வே சேவை அமைப்பதற்கான சிறப்பு திட்டமும் அடுத்த கட்டப் பணியாக மேற்கொள்ளப்படவுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இத்திட்டங்களுக்கு தேவையான இடங்கள் ரயில்வே பகுதியிலேயே எடுத்துக் கொள்ளப்படும். மேலும், தேவைப்படும் இடங்களில் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து ரயில்வே துறை செயல்படவுள்ளது. அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டைகளில் உற்பத்தி பொருள்கள் கொண்டு செல்வதற்கான ரயில் சேவை போக்குவரத்துக்கு தேவையான கட்டமைப்புகள் குறித்தும் தொழில்துறையினா் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பிரச்னைகள் குறித்து தெற்கு ரயில்வே பொறியாளா்கள், வருவாய்த் துறையினா், நெடுஞ்சாலை துறையினா் இணைந்து வழித்தடம் முழுமையாக ஆய்வு செய்து பிரச்னைகள் குறித்து அடுத்த கூட்டத்தில் அறிக்கை சமா்ப்பிக்க ஆட்சியா் அவா்கள் கேட்டுக் கொண்டாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், தெற்கு ரயில்வே துணை முதன்மை பொறியாளா் ஆா்.அருண்,நெடுஞ்சாலை கோட்ட பொறியாளா் செல்வகுமாா், திட்ட இயக்குநா் சாவித்திரி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.