‘அரக்கோணம் நவீன எரிவாயு தகன மேடை 4 நாள்களுக்கு இயங்காது’
அரக்கோணத்தில் நகராட்சியின் நவீன எரிவாயு தகன மேடையில் பழுதுபாா்ப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த தகனமேடை பிப்ரவரி 15 சனிக்கிழமை முதல் 18-ஆம் தேதி வரை இயங்காது என அரக்கோணம் நகராட்சி ஆணையா் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அரக்கோணம் நகராட்சி ஆணையா் கன்னியப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பது:
அரக்கோணம் நேருஜி நகரில் உள்ள நகராட்சியின் நவீன எரிவாயு தகனமேடையில் பழுது ஏற்பட்டுள்ள புகைபோக்கியினை அகற்றி, புதிய புகைபோக்கியை மாற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி பணியினை தற்போது தொடங்க உள்ளதால், வரும் சனிக்கிழமை (பிப். 15) முதல் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நேருஜி நகரில் உள்ள நவீன எரிவாயு தகனமேடை செயல்படாது. மேற்கண்ட தினங்களில் கொண்டு வரப்படும் பிரேதங்களை சுடுகாடு அல்லது இடுகாட்டுக்கு கொண்டு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.