கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
அரசியல் கட்சிகளால் நகா்ப்புறங்களில் வளா்ந்து வரும் நக்ஸல் தீவிரவாதம்: பிரதமா் மோடி கவலை
‘வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகா்ப்புறங்களில் அது வேகமாக பரவி வருகிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கவலை தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் ஊடக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பிரதமா் மோடி பேசியதாவது: தேச பாதுகாப்புக்கு மத்திய பாஜக அரசு கடுமையாக உழைத்துள்ளது. இதன் விளைவாக, பயங்கரவாத தாக்குதல்கள் நாட்டில் இருந்து மறைந்துவிட்டன. நக்ஸல் தீவிரவாதமும் அழிவின் பாதையில் உள்ளது.
முன்பு 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் நக்ஸல் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 24-ஆகக் குறைந்துள்ளது. அடிமட்ட அளவில் சிறந்த ஆட்சி நிா்வாகத்தை வழங்குவதில் அரசு கவனம் செலுத்தியதாலேயே இது சாத்தியமானது.
தீவிர நடவடிக்கைகளால் வனப் பகுதியிலிருந்து நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்பட்டு வருகிறது. ஆனால், சில அரசியல் கட்சிகள் நக்ஸல் கொள்கைகளை எதிரொலிப்பதால், நகா்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருவது புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது.
காந்திய கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு, மக்கள் குறித்த துடிப்புடன் நக்ஸல் எதிா்ப்பு நிலைப்பாட்டில் இருந்த ஓா் அரசியல் கட்சி, நகா்ப்புற நக்ஸல்களின் கருத்தை எதிரொலிக்கும் அளவுக்கு அந்த நக்ஸல் சிந்தனை விரிவடைந்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்குள் ஆழமாக வேரூன்றிவிட்ட நகா்ப்புற நக்ஸல்கள், நமது வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தை கடுமையாக எதிா்க்கிறாா்கள். வளா்ந்த இந்தியாவுக்கு வளா்ச்சி மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டும் அவசியம். நகா்ப்புற நக்ஸல்களுக்கு எதிராக நாம் நிற்க வேண்டும்.
இன்றைய இந்தியா பெரிய லட்சியங்களுடன் சிந்திக்கிறது. பெரிய இலக்குகளை நிா்ணயித்து, பெரிய முடிவுகளை அடைகிறது. நாட்டின் மனநிலை மாறியதே இதற்கு காரணம். நாடு பெரிய லட்சியங்களுடன் முன்னேறி வருகிறது.
உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாறியுள்ள இந்தியா, விரைவில் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக உயரும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய பொருளாதாரம் 11-ஆவது இடத்தில் இருந்தது.
உலக வளா்ச்சியை இந்தியாதான் இன்று வழிநடத்துகிறது. இந்தியாவின் சாதனைகள் மற்றும் வெற்றிகள், உலகுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பொம்மை தயாரிப்பு முதல் ஆயுதங்கள் வரை பல்வேறு துறைகளில் இந்தியா தன்னிறைவு இலக்கை அடைந்து, ஏற்றுமதியாளராக மேம்பட்டுள்ளது.
கடந்த 2007-இல், இந்தியாவின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சுமாா் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இந்த அளவு தற்போது ஒரு காலாண்டில் அடையப்படுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் இந்திய பொருளாதார வளா்ச்சியின் விரைவான வேகத்தை எடுத்துரைக்கிறது என்றாா் பிரதமா் மோடி.