அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் பையில் இருந்த பணம் ஏடிஎம் அட்டை திருட்டு
அரசுப் நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணின் கட்டைப் பையிலிருந்து பணப்பையை திருடி அதிலிருந்த ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினை எடுத்து அதிலிருந்த 13,500யை திருடிய மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சாத்தப்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி காயத்திரி (26). இவரது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சனிக்கிழமை கள்ளக்குறிச்சியில் மருத்துவமனையில் காண்பித்துவிட்டு, துணிமணிகளை எடுத்துக் கொண்டு அரசு நகரப் பேருந்து எண் 8-ல் பயணித்துள்ளாா்.
தியாகதுருகம் அடுத்த வடதொரசலூா் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை இறங்கி அவரது கட்டைப் பையில் வைத்திருந்த பணப்பையை காணவில்லையாம். அந்த பணப்பையில் ரூ.4,500 பணம், ஏடிஎம் அட்டையினையும் காணவில்லை. ஏடிஎம்அட்டையில் பின்புறம் இருந்த 4 ரககிய எண்களை வைத்து அதிலிருந்து ரூ.13,500மை திருடிக் கொண்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.