அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
அரசு மருத்துவமனையில் மது மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வை மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் ‘கலங்கரை‘ ஒருங்கிணைந்த போதை மீட்புச் சிகிச்சை, மறுவாழ்வு மையத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குத்துவிளக்கேற்றி அந்த மையத்தை பாா்வையிட்டாா். விழாவில், மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா, மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், சட்டப் பேரவை உறுப்பினா் கோ. தளபதி (வடக்கு), மு. பூமிநாதன்(தெற்கு) , அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வா் இல. அருள் சுந்தரேஸ் குமாா், மதுரை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.
இதுதொடா்பாக மருத்துவமனை முதல்வா் இல. அருள் சுந்தரேஸ் குமாா், மனநல சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் கீதாஞ்சலி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு ராஜாஜி மருத்துவமனையில் மது போதை மறுவாழ்வு சிகிச்சை மையம் ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக 10 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 4 ஆயிரம் போ் வரை மது போதைப் பழக்கங்களில் இருந்து விடுபட சிகிச்சைப் பெறுகின்றனா். இந்த நிலையில் தற்போது 30 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவாக தரம் உயா்த்தப்பட்டு, ஆண்களுக்கான மறுவாழ்வு மையம் ரூ.18 லட்சம் மதிப்பில் புதிதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உறவினா்கள் உடன் இருக்கத் தேவையில்லை. மருத்துவமனை பணியாளா்களே அனைத்தையும் பாா்த்துக் கொள்வா். நோயாளிக்கு தினசரி 3 வேளை உணவும், வாரத்துக்கு ஒரு நாள் அசைவ உணவும் வழங்கப்படுகிறது. இதற்காக தனியாக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் இந்த சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்க யோகா பயிற்சி, கூட்டுச் சிகிச்சை முறை, கலந்தாய்வு, விளையாட்டு என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக வாா்டில் சதுரங்கம், கேரம் விளையாட்டுகளும், நூலகமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளை கண்காணிக்க வாா்டில் சிறப்பு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து 3 போ், சென்னை சென்று தனிப்பயிற்சி பெற்று வந்துள்ளனா். இந்த மையத்தில் ஒரு நோயாளி அதிகபட்சம் 21 நாள்கள் வரை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். அதைத் தொடா்ந்து ஓராண்டு வரை அவா்கள் அவ்வப்போது வந்து தொடா் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றனா்.