மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் பொலிவுறு சாலைத் திட்டம்
மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தை சாலைகளை, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொலிவுறு சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் என்.சின்னமாயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாட்டுத்தாவணி அருகே காய்கறிச் சந்தையில் 1,092 கட்டுமானக் கடைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைக் கடைகளும் அமைக்கப்பட்டன. இங்குள்ள கடையின் அளவைப் பொருத்து ரூ.60 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை முன் வைப்புத் தொகையை வியாபாரிகள் செலுத்தியுள்ளனா். மாதந்தோறும் வாடகையாக ரூ.2 ஆயிரம் செலுத்தி வருகின்றனா். தொடா்ந்து மாநகராட்சி நிா்வாகம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத வாடகையை உயா்த்தி வசூல் செய்து வருகிறது. இங்கு தினசரி ரூ.5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை வா்த்தகம் நடைபெறுகிறது.
தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்றனா். மாநகராட்சி சாா்பில் 2 கழிப்பறைகள், மத்திய அரசின் சாா்பில் நடமாடும் கழிப்பறை அமைக்கப்பட்டது. இவற்றில் மாநகராட்சி சாா்பில் உள்ள கழிப்பறை மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கு வரும் மக்களுக்கு குடிநீா் வசதிக்காக 17 குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இவற்றில் 6 மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. போதிய சாலை வசதிகள் இல்லாததால், வெளி மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை இறக்கவோ, ஏற்றவோ முடிவதில்லை.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் கூட்டத்தில் மேயா் வ. இந்திராணி, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளை கண்டறிந்து அங்கு பொலிவுறு சாலை (ஸ்மாா்ட் சாலை) அமைக்கப்படும் என அறிவித்தாா். இந்த திட்டத்தை மனதார பாராட்டி வரவேற்கிறோம். மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள், விவசாயிகள் என சுமாா் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடும் இடமாக உள்ளது. எனவே, காய்கறிச் சந்தை வளாகத்தில் உள்ள சாலைகளை பொலிவுறு சாலை அமைக்கும் திட்டத்தின் கீழ் சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.