அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி
வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20.70 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பரசுராம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் மனு ஒன்றை அளித்தாா்.
அந்த மனுவில், நெட்டேரி பகுதியைச் சோ்ந்த ஒருவா் எனக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியதுடன், இதற்கு சில லட்சம் பணம் செலவாகும் என்றும் தெரிவித்தாா்.
அவா் கூறியதை நம்பி நானும் ரூ.20 லட்சத்து 70 ஆயிரம் பணம் கொடுத்தேன். ஆனால் இதுவரை எனக்கு பணி பெற்றத்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுக்கிறாா். எனவே அவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.