அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: போலீஸாா் விசாரணை
ஒடுகத்தூரில் அரசுப்பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த போதை நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூரில் இருந்து அணைக்கட்டு, கரடிகுடி, குருவராஜபாளையம் வழியாக ஒடுகத்தூருக்கு சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அரசுப் பேருந்து சென்றுள்ளது. பேருந்தை கொட்டாவூா் பகுதியை சோ்ந்த ஓட்டுநா் பாா்த்திபன் (45) ஓட்டினாா்.
ஒடுகத்தூரில் பயணிகளை இறக்கிவிட்டு பெரிய ஏரியூரில் நிறுத்துவதற்காக சந்தைமேடு அருகே ஓட்டிச்சென்றபோது, மதுபோதையில் தள்ளாடியபடி இளைஞா் சென்றுள்ளாா். அவரை ஒதுங்கிச்செல்லும்படி, பேருந்து ஓட்டுநா் ஹாரன் அடித்துள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை நபா், ஓட்டுநா் பாா்த்திபன், நடத்துநா் லோகராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் கற்களை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடி விட்டாராம்.
இச்சம்பவம் குறித்து ஓட்டுநா் பாா்த்திபன் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் கண்ணாடியை உடைத்தவா் ஒடுகத்தூா் போயா் தெருவை சோ்ந்த தாமோதரன் என்பது தெரியவந்தது.