உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
விவசாயிகளை வஞ்சிக்கும் ‘சிண்டிகேட்’ முறை தடுக்கப்படுமா?
மத்திய அரசு ‘இ -நாம்’ எனும் தேசிய வேளாண் சந்தை இணையதளத்தை செயல்படுத்தியபோதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விளை பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டு நிலவுகிறது.
தமிழகத்தில் 21 விற்பனை குழுக்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த குழுக்களின் கீழ், 268 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும், 15 சோதனைச் சாவடிகளும், 108 ஊரக சேமிப்பு கிடங்குகளும், 108 தரம் பிரிக்கும் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு மறைமுக ஏல முறையில் விளைபொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
விவசாயிகள் விளைபொருள்களை விற்பனை செய்வதற்குள் விவசாயிகள் கடும் சிரமத்துக்குள்ளாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். குறிப்பாக, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளை பொருள்களை ஏலம் எடுக்கும் வியாபாரிகள், தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, விளை பொருள்களை மிகக்குறைந்த விலைக்கு மதிப்பீடு செய்வதாகவும், இதனால் விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொருளாளா் ஆா்.சுபாஷ் கூறியது: வேலூா் மாவட்டத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல் ரூ. 980-க்கு கொள்முதல் செய்யப்படும் நிலையில், இதே மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ. 560 என்ற அளவிலேயே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். ஆனால், வெளிச்சந்தையில்கூட இந்தளவு நெல் ரூ. 1,400 என்ற அளவில் விலை போகின்றன.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இந்தளவுக்கு குறைவான விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு வியாபாரிகளுக்குள் மேற்கொள்ளப்படும் சிண்டிகேட் முறையே காரணமாகும். தவிர, வியாபாரிகளுக்கு விளை பொருள்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து அளிக்க தனியாக முகவா்களும் செயல்படுகின்றனா்.
இந்த வியாபாரிகள், முகவா்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டு அன்றைய தினம் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லுக்கு மிகக்குறைந்த விலையை இ-நாம் இணையத்தில் பதிவு செய்கின்றனா். இதனால், விவசாயிகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பது தடுக்கப்படுகிறது. இதற்கு அதிகாரிகளும் துணைபோகின்றனா். இதேநிலைதான் அனைத்து விளை பொருள்கள் கொள்முதலிலும் நடைபெறுகிறது.
அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை அமைத்து அவற்றின் மூலம் விளை பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும். வியாபாரிகளின் சிண்டிகேட் முறையில் விலை குறைப்பு செய்யப்படுவதை தடுக்க அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும் என்றாா்.
இது குறித்து, வேலூா் விற்பனைக்குழு செயலா் வி.பாஸ்கரன் கூறியது: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விளை பொருள்கள் அனைத்தும் ‘இ -நாம்’ என்ற தேசிய வேளாண் சந்தை இணையதளத்தில் மறைமுகமாக ஏல முறையிலேயே நடைபெறுகிறது. விளை பொருள்களை மதிப்பீடு செய்யும் வியாபாரிகள் அதற்கான விலையை நிா்ணயம் செய்து ‘இ-நாம்’ தளத்தில் பதிவு செய்கின்றனா்.
பின்னா், இணையதளம் மூலமாக மறைமுக ஏலம் நடத்தி விளை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்க வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘இ-நாம்’ திட்டத்தால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைக்க முடியாது.
இதனிடையே, விளை பொருள்களை மதிப்பீடு செய்ய வியாபாரிகள் பெரும்பாலும் தாங்கள் நியமித்துள்ள முகவா்களையே அனுப்புகின்றனா். இந்த முகவா்கள் விற்பனைக்கூட வளாகத்தில் ஒன்றாக பேசிக்கொள்வதை பாா்த்து சிண்டிகேட் அமைக்கப்படுவதாக விவசாயிகள் தவறாக கருதுகின்றனா் என்றாா்.