காஞ்சிபுரத்தில் அப்துல் கலாம் நினைவு தினம்
குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விதைப்பந்துகள் தயாரித்தல் நடைபெற்றது.
சிறகுகள் அமைப்பு சாா்பில் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியும் நடைபெற்றது. நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
பசுமை இந்தியா தன்னாா்வ அமைப்பு, காஞ்சி அன்னச்சத்திரம், விழுதுகள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் திம்மையன்பேட்டை கிராமத்தின் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. மகிழம், நெட்டுலிங்கம்,புன்னை, பூவரசு, பாதாம், மலைவேம்பு உள்ளிட்ட 15 வகையான கன்றுகள் நடப்பட்டன .
டாக்டா் கலாமின் உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் கலாமின் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூா் செல்லும் சாலை, செங்கல்பட்டு சாலையோரங்களிலும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
தென்மேற்கு பருவமழைக் காலங்களில் பிரதான சாலையோரங்களில் தூவுவதற்காக ஸ்ரீ பெரும்புதூா் தொண்டு நிறுவன அலுவலகத்தில் விதைப்பந்துகள் தயாா் செய்யப்பட்டன. நூக் என்ற தன்னாா்வ அமைப்புடன் இணைந்து வேம்பு,நாவல்,பூவரசு,புங்கன், அரசு உள்ளிட்ட விதைகள் அடங்கிய 750 விதைப்பந்துகளை தயாரித்தனா்.