ஊசூரில் குட்கா விற்ற கடைக்கு ‘சீல்’ வைப்பு
வேலூா் அருகே குட்கா விற்பனை செய்த கடையை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.
வேலூா் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், பல இடங்களில் குட்கா விற்பனை நடைபெறுவதாக புகாா்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பிரபாகரன் தலைமையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, ஊசூா் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள ஒரு பெட்டிக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், 2 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும், அந்தக் கடையில் இருந்த 2 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்ததுடன், அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை கடைகளில் வைத்து விற்பனை செய்யக்கூடாது. பள்ளி, கல்லூரி அருகே எந்த விதமான போதை பொருள்களையும் விற்பனை செய்யக்கூடாது. மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.