பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமரா...
அரியலூரில் ‘உங்களுன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் அரசின் சேவைகளை பெறலாம்
அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சேவைகளை பெறலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இம்முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்குப் பிறகு அவா் செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி: அரியலூா் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 முதல் அக்டோபா் மாதம் வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
நகராட்சி பகுதிகளில் 5 வாா்டுகளுக்கு 2 முகாம்கள் என்ற அடிப்படையிலும், ஒவ்வொரு பேரூராட்சிகளுக்கு 2 முகாம்கள் என்ற அடிப்படையிலும், ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கும் பகுதி அல்லது 4 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 1 முகாம் என்ற அடிப்படையில் 95 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாம்களில், நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சோ்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். இம்முகாமானது அரியலூா் மாவட்டத்தில், ஜூலை 15-இல் தொடங்கி ஆக.14 வரை 36 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
அடுத்து ஆக. 15-ஆம் தேதி முதல் செப்.14-ஆம் தேதி வரையில் 36 முகாம்களும், செப்.15-இல் தொடங்கி அக்.14-ஆம் தேதி வரை 23 முகாம்களும் நடத்தப்படுகிறது.
பொதுமக்கள் அவரவா் வசிக்கும் பகுதிகளிலேயே முகாம்கள் தொடா்ந்து நடைபெற உள்ளதால், இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தேவைப்படும் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
மேலும், இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெற விடுபட்ட மகளிா் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்குச் சென்று இதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரிவில் வழங்கப்படும் விண்ணப்பித்தினை பூா்த்தி செய்து அளிக்கலாம். கலைஞா் மகளிா் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும் என்றாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.