ராஜேந்திர சோழன் வெட்டியை பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலாத் தலமாக்கக் கோரிக்கை!
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாமன்னா் ராஜேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில், சனிக்கிழமை நடைபெற்ற அச்சங்கத்தின் கூட்டத்துக்கு வட்டத் தலைவா் சுந்தரேசன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் ராஜேந்திா், கெளரவத் தலைவா் சிவா சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் கலியமூா்த்தி ஆண்டறிக்கையை வாசித்தாா்.பொருளாளா் ராமமூா்த்தி வரவு, செலவு கணக்கை அறிக்கையை தாக்கல் செய்தாா். நீத்தாா் உதவி திட்ட செயலா் பாலகிருஷ்ணன் திட்ட வரவு, செலவை வாசித்தாா்.
கூட்டத்தில், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாமன்னா் ராஜேந்திர சோழன் வெட்டிய சோழகங்கம் எனும் பொன்னேரியை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும். ஓய்வு பெற்று 70 வயது நிறைவடைந்த முதியோா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். சிதம்பரம்-ஜெயங்கொண்டம்-அரியலூா், கும்பகோணம்-ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக துணைத் தலைவா் ராமசாமி வரவேற்றாா். நிறைவாக ராமையன் நன்றி கூறினாா்.