அரியலூரில் ரூ.10.15 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம்: காணொலியில் துணை முதல்வா் அடிக்கல்
அரியலூா் விளையாட்டு அரங்கில் ரூ. 10.15 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய செயற்கை இழை வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானத்துக்கு சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதன் தொடா்ச்சியாக, அரியலூா் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பங்கேற்ற போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
முன்னதாக, அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில், ரூ.3.83 கோடி மதிப்பில் 31 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கும், திருமானூா் ஒன்றியம், கீழக்கொளத்தூா் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பணிக்கும் அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.
மேலும் கீழக்கொளத்தூா், மரகத் பூச்சோலையில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தாா்.
இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா முன்னிலை வகித்தாா். அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் லெனின், அரியலூா் நகராட்சி ஆணையா் (பொ) அசோக்குமாா், நகா்மன்ற தலைவா் சாந்தி கலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.