அரியலூரில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
அரியலூா் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளா்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் இப்பணியை ஆட்சியா் பொ. ரத்தினசாமி தொடக்கிவைத்துக் கூறியதாவது:
இத்திட்டமானது உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக் கூடியதாகும். இது எளிதாக அணுகுதல், சமவாய்ப்பு வழங்குதல், ஒருங்கிணைத்தல் ஆகிய மூன்று குறிக்கோள்களைக் கொண்டு, கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் அவா்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே எளிதில் கிடைத்திட வழிவகை செய்வதாகும்.
அரியலூா் மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகரப் பகுதிகளை உள்ளடக்கிய 6 வட்டார ஒருங்கிணைந்த சேவை மையங்களும், உட்கோட்ட அளவில் 2 ஒருங்கிணைந்த சேவை மையங்களும் ஏற்படுத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி ஊராட்சி ஒன்றியம், நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் முதல்கட்டமாக 80 முன்களப்பணியாளா்கள் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் மூலமாக நியமிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த முன்களப்பணியாளா்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று கணக்கெடுத்தல், மறுவாழ்வு உதவிகள் கிடைக்க மதிப்பீடு செய்தல், பிற துறை மூலமாக வழங்கப்படும் உதவிகளைப் பெற்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வா் என்றாா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மஞ்சுளா மற்றும் முன்களப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.