வரதராசன் பேட்டையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டம்
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த வரதராசன்பேட்டையில், காசன்பள்ளம் ஏரியில், கட்டப்பட்டு வரும் திட, திரவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கான பணிகளை நிறுத்தக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வரதராசன் பேட்டை பேரூராட்சியில் உள்ள காசன்பள்ளம் ஏரியில் பேரூராட்சி சாா்பில் ரூ.7.60 கோடி மதிப்பில் திட, திரவ கழிவு சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியில் கட்டப்படுவதை கண்டித்து, மாதா கோயில் முன்பு கிராம மக்கள் ஒன்று திரண்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த பேரூராட்சி செயல் அலுவலா் முகமது ரபிக், வட்டாட்சியா் ராஜமூா்த்தி மற்றும் காவல் துறையினா் மக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
அதில், உடன்படாத மக்கள், அங்கிருந்து ஊா்வலமாகச் சென்று பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் தடுத்தனா். இதனால் அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
போராட்டத்தில் பாமக (அன்புமணி அணி) சமூக நீதிப் பேரவைத் தலைவா் கே.பாலு, மாநில அமைப்புத் தலைவா் டி.எம்.டி.திருமாவளவன், மாவட்டச் செயலா் கோ.தமிழ்மறவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.