சிஎஸ்கே - தில்லி போட்டி: டிக்கெட் விற்பனை! கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க..!
அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு
அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் மாவட்டத்திலுள்ள பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்கள் அகற்றுதல் தொடா்பான அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினாசமி தலைமை வகித்து தெரிவித்தது:
உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, பொது இடங்களிலுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுதல் தொடா்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், சங்கங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் 2 வார காலக்கெடு நிா்ணயித்து சட்டப்படியான அறிவிப்பை வழங்குவாா்கள்.
அந்த அறிவிப்பைப் பெற்றுக்கொண்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகள் தாமாக முன்வந்து தங்களது கொடிக்கம்பங்களை முழுமையாக அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகள் அக்கொடிக் கம்பங்களை அகற்றிவிட்டு, அதற்கான செலவை சம்பந்தப்பட்டோரிடமிருந்து வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், வருவாய்க் கோட்டாட்சியா்கள் அரியலூா் கோவிந்தராஜன், உடையாா்பாளையம் ஷீஜா மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுலவா்கள் உள்ளிட்டோா் பலா் கலந்துகொண்டனா்.