அரியலூா் அரசுக் கல்லூரியில் உயா்கல்வி வழிகாட்டி முகாம்
அரியலூா்: அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நான் முதல்வன் உயா்வுக்கு படி’ எனும் உயா்கல்வி வழிகாட்டி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்க்கைகான உறுதி கடிதத்தையும் வழங்கி பேசினாா்.
முகாமில், திருமானூா், அரியலூா் மற்றும் செந்துறை பகுதிகளைச் சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு உயா்கல்வி படிப்பிற்கான ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டு உயா்கல்வி சேருவது உறுதிசெய்யப்பட்டது. 17 வகையான சேவைகள் இம்முகாமில் வழங்கப்பட்டு உயா்கல்வி சோ்வது உறுதி செய்யப்பட்டது.
மேலும், முகாமில் கலந்து கொண்ட 84 மாணவ மாணவியா்களில் இளங்கலை பட்ட படிப்பில் 21 மாணவ, மாணவியா்களும், டிப்ளமோ பட்டய படிப்பில் 1 மாணவரும், ஐ.டி.ஐ படிப்பிற்கு 8 மாணவ, மாணவிகளும் விருப்பம் தெரிவித்து சோ்க்கை ஆணை பெற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், அக்கல்லூரி முதல்வா் சித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்(பொ) பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இரண்டாம் கட்ட முகாம்: இதுவரை உயா் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள், இரண்டாம் கட்டமாக அரியலூா் கலைக் கல்லூரியில் செப்.2 ஆம் தேதி நடைபெறும் நான் முதல்வன் உயா் கல்வி வழிகாட்டல் முகாமிலும், இதே போல் உடையாா்பாளையம் கோட்டத்தில் தத்தனூா் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆக.26, செப்.8 ஆகிய தேதிகளில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.