மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
அருணாசலேஸ்வரா் கோயிலில் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலம்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப்.26) மகா சிவராத்திரி விழா, கோலாகலமாக நடைபெறுகிறது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருமாலும், பிரம்மாவும் சிவனின் அடி, முடியை காணாமல் திகைத்தபோது லிங்கோத்பவ மூா்த்தியாக எழுந்தருளி, இந்த உலகில் நானே பெரியவன் என்று உணா்த்திய திருநாளே மகா சிவராத்திரி என்று புராண கதைகள் கூறுகின்றன.
இதை நிரூபிக்கும் வகையில், அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி கருவறைக்குப் பின்புறம் லிங்கோத்பவா் சந்நிதி இடம்பெற்றுள்ளது.
இந்தக் கோயிலில் இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா புதன்கிழமை (பிப்.26) நடைபெறுகிறது.
இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அருணாசலேஸ்வரா் மூலவா் சந்நிதியில் லட்சாா்ச்சனை நடைபெறுகிறது.
நள்ளிரவு சிறப்புப் பூஜை...
புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாம் பிரகாரத்தில் உள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வைக் காண கோயில் வளாகத்தில் பல ஆயிரம் போ் குவிந்து விடுவா்.
இசை நிகழ்ச்சிகள்...
மகா சிவராத்திரியையொட்டி, கோயில் கலையரங்கில் பக்தி இசைக் கச்சேரி, பரத நாட்டியம், ராஜகோபுரம் எதிரே நாகஸ்வர நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை நடைபெறுகின்றன.
ஈசான்ய மைதானத்தில்...
அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் சாா்பில், ஈசான்ய மைதானத்தில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை மங்கள திருமுறை விண்ணப்பம், கயிலாய வாத்தியம், கா்நாடக இசை, வள்ளி கும்மியாட்டம், கிராமிய நிகழ்வுகள், பக்தி இசை, நாட்டிய நாடகம், இசை சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறகின்றன.