மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
செங்கத்தில் தெரு நாய்கள், குரங்குகளால் பொதுமக்கள் அவதி!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் தெரு நாய்கள், குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கம் துக்காப்பேட்டை, பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, இராஜ வீதி, பெருமாள் கோவில் தெரு, தளவாநாய்க்கன்பேட்டை போன்ற பகுதிகளில் தெரு நாய்கள் இனப்பெருக்கம் அடைந்து அதிகளவில் சாலையில் சுற்றித் திரிகின்றன.
குறிப்பாக, இறைச்சிக் கடைகள் இருக்கும் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் கழிவு இறைச்சிகளை சாப்பிட ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையில் வரும் வாகனம் தெரியாமல் ஓடுகின்றன.
அப்போது, அவ்வழியாகச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நாய்கள் மீது வாகனத்தை ஏற்றி விபத்துகள் நிகழ்கின்றன. பெரிய வாகனங்கள் வரும்போது வாகனத்தில் சிக்கி நாய்கள் உயிரிழக்கின்றன. சாலையில் அடிபட்டு இறக்கும் நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணி நடைபெறுவதில்லை.
மேலும், செங்கம் சுற்றப்புறப் பகுதியில் ஆடு, கோழி வளா்க்கும் பகுதிக்குச் சென்று இறைச்சிக் கடை கழிவு சாப்பிடும் நாய்கள், வளா்ப்பு ஆடு, கோழிகளை கடித்து விடுகின்றன. சில நேரத்தில் கோழிப் பண்ணையில் இருந்து கோழி குஞ்சுகளை கடித்து சாப்பிடுகின்றன.
தெரு நாய்களால் பொதுமக்களுக்கும், கோழி வளா்ப்போரும் தினசரி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனா்.
குரங்குகள் தொல்லை
அதேபோல, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் செங்கம் நகருக்குள் வந்த குரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து சாலையில் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
காலை நேரத்தில் பெருமாள் கோயில் வளாகம், இராஜ வீதி தெருவில் உள்ள கடைகளுக்குச் சென்று பழம், பல்வேறு தின்பண்டங்களை எடுத்துச் சென்று சாப்பிடுகின்றன. மேலும், வீட்டின் மாடியில் வெயிலில் காயவைக்கும் பொருள்களை சேதப்படுத்துவது, தனியாக இருக்கும் குழந்தைகள் கையில் இருப்பதை பிடிங்கிக் கொண்டு கடிக்க வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.
பெருமாள் கோவில் தெரு, இராஜ வீதியில் வசிக்கும் மக்களும், வணிகா்களும் தினசரி குரங்குக் கூட்டத்தால் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதனால், சம்பந்தப்பட்ட நிா்வாகம் கண்காணித்து, செங்கம் நகா் சாலைகளில் சுற்றித் திரியும் நாய், குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வா்களும் எதிா்பாா்க்கின்றனா்.