அரையிறுதியில் இன்டர் மிலன் த்ரில் வெற்றி: சோகத்தில் பார்சிலோனா ரசிகர்கள்!
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதல்கட்ட அரையிறுதி 3-3 என சமநிலையில் இருந்தது. அதனால், இரண்டாம் கட்ட அரையிறுதி போட்டி மீது அதிகமாக எதிர்பார்ப்பு இருந்தது.
இன்டர் மிலனின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இன்டர் மிலன் 2 கோல்கள் (21’, 45+1’) அடித்து முன்னிலைப் பெற்றது.
இரண்டாம் பாதியில் மீண்டெழுந்த பார்சிலோனா தொடர்ச்சியாக 54,60,87ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தியது.
கடைசி 2 நிமிடங்கள் மீதமிருந்த வேளையில் இன்டர் மிலனின் அசெர்பி ( 90+3’) கோல் அடித்து போட்டியை கூடுதல் நேரத்துக்கு எடுத்துச் சென்றார்.
பின்னர் கூடுதல் நேரத்தில் 99ஆவது நிமிஷத்தில் இன்டர் மிலனின் பிரட்டசி கோல் அடித்து அசத்தினார். கடைசிவரை போராடிய பார்சிலோனா அணியினால் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் 4-3 (ஒட்டுமொத்தமாக 7-6) கோல்கள் கணக்கில் இன்டர் மிலன் அசத்தல் வெற்றி பெற்றது.
பார்சிலோனாவின் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்ததினால் அந்த அணியின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.