Vikatan Awards | Nambikkai விருதுகள் 2024 | Part -3 | தோழர் நல்லகண்ணு | GK | Raj...
அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்தும் மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வலியுறுத்தியும் சிஐடியு தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் தங்கராஜ், ஒன்றியச் செயலா் நாராயணமூா்த்தி, சிஐடியு அறந்தாங்கி ஒன்றிய ஒருங்கினைப்பாளா் கா்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போராட்டத்தில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதிய நிலுவை, சிக்கல்கள் குறித்து நகராட்சி ஆணையா் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும். ஊதியத்துடன் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதியை உரிய நிறுவனத்தில் கட்ட வேண்டும்.
மாதந்தோறும் ஊதியத்தை 7-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ தொகையை உரிய முறையில் கட்டி ரசீதுகளை வழங்க வேண்டும். தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.