அறந்தாங்கியில் பிரேமலதா விஜயகாந்த் பிரசார பயணம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ’’உள்ளம் தேடி, இல்லம் நாடி’’ எனும் தேமுதிகவின் பிரசாரப் பயணம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
அப்போது தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
தேமுதிகவைப் பாா்த்தாலே திமுகவுக்கு பயம் வருகிறது. அதனால் தான் அறந்தாங்கியில் பல மணிநேரம் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடைகோடித் தொண்டன் உள்ளவரை தேமுதிகவை யாரும் அசைக்க முடியாது. மக்களுக்குத் துரோகம் செய்பவா்கள் காணாமல் போவாா்கள். எனவே, மக்கள் வாக்குக்கு பணம் வாங்காமல், சொந்தக் காலில் நிற்க வேண்டும்.
தேமுதிக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால், அதன் பிறகு 50 கட்சிகள் கூட்டணி சோ்ந்து வந்தாலும் யாராலும் அசைக்க முடியாது. அந்த அளவுக்கு மக்களுக்கான திட்டங்கள் இருக்கும்.
யாருடன் கூட்டணி என்பதை அடுத்த ஆண்டு ஜன.9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தெரிவிப்போம் என்றாா் பிரேலதா.
கூட்டத்தில், கட்சியின் பொருளாளா் எல். கே. சுதீஷ், இளைஞரணிச் செயலா் விஜயபிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.