தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி
சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் அதிக விபத்துகள் நடைபெறும் 100 இடங்களைத் தோ்வு செய்து, முதல்கட்டமாக 50 இடங்களில் பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் ஏற்படும்போது எவ்வாறு முதலுதவி செய்து உயிா்களை காக்கலாம் என்பதற்கான பயிற்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் சாா்பில் நடத்தப்படுகிறது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூா் முதல் திருமயம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், கீரனூரில் நடைபெற்ற பயிற்சியில் பேருந்து ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.
கீரனூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மணிகண்டன் மற்றும் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியின் முதல்வா் இளங்கோவன், 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்டப் பொறுப்பாளா் விமல்ராஜ் ஆகியோா் பயிற்சி அளித்துப் பேசினா்.
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவா்களுக்கு எந்த வகையான முதலுதவி அளிக்க வேண்டும் என்று செயல் விளக்கத்துடன் செய்துகாட்டப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற 60 பேருக்கு முதலுதவி கையேடுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.