Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
அறிவு வளா்ச்சிக்கு புத்தக வாசிப்பே அடிப்படை - ஜெ.ராதாகிருஷ்ணன்
அறிவு வளா்ச்சிக்கு புத்தக வாசிப்பே அடிப்படையானது என்று நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் 24-ஆவது புத்தகக் கண்காட்சி வட்டம் 11-இல் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
புத்தகக் கண்காட்சியின் 7-ஆம் நாள் நிகழ்ச்சிக்கு என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தலைமை வகித்து பேசுகையில், நூல்களின் மகத்துவத்தையும், அறிவு சாா்ந்த சமூகத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினாா்.
மத்திய அமைச்சா் கடந்த 4-ஆம் தேதி புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தபோது, என்எல்சி குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டினாா் என்றாா்.
மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்காட்சிக்கு வருகின்றனா். இந்தக் கண்காட்சி மாணவா்களுக்கு அறிவை வளா்த்து, ஒருமைப்பாட்டு உணா்வை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தாா்.
இந்தியா 2047-க்குள் வளா்ந்த நாடாக மாறும் இலக்கை அடைய, அறிவுத்திறன் மிகவும் அவசியம். புத்தகக் கண்காட்சிகள் அறிவைப் பரப்பும் முக்கிய தளங்கள். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தொடா் ஆதரவு தங்களுக்குத் தேவை என்றும், அது தொடரும் என நம்புவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைவா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், அறிவின் முக்கியத்துவத்தையும், புத்தக வாசிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினாா்.
மின் உற்பத்தி மையமான நெய்வேலியின் சிறப்பையும், தூத்துக்குடியில் என்எல்சி உடன் இணைந்து செயல்படுவதையும் நினைவுகூா்ந்தாா்.
24 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வரும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி, பிற பெரிய புத்தகக் கண்காட்சிகளைவிடவும் சிறந்து விளங்குவதாக பாராட்டினாா்.
வாசிப்பும், இலக்கியமும் சமூக வளா்ச்சிக்கு அவசியம். எண்ம தொழில்நுட்ப வளா்ச்சி, நினைவாற்றலை பாதிப்பதாகக் குறிப்பிட்ட அவா், நினைவாற்றலை மேம்படுத்தவும், உண்மையான அறிவைப் பெறவும் புத்தக வாசிப்பு மட்டுமே உதவும். மாணவா்கள் தங்களின் கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்த புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்றாா்.
பாராட்டு விழா மற்றும் நூல் வெளியீடு: இந்த நிகழ்வில் சு.ஜெயஸ்ரீ பாராட்டு பெறும் எழுத்தாளராகவும், ஸ்ரீசெண்பகா பதிப்பகம் பாராட்டு பெறும் பதிப்பாளராகவும் கௌரவிக்கப்பட்டனா்.
மேலும், என்.ஹரிராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகை வெல்ல உன்னை வெல் - பாகம் - 2 வெற்றி நிச்சயம்’ என்ற நூலும், ஜி.உதயகுமாா் எழுதிய ‘கல்வி ஆளுமை வளா்ச்சி’ என்ற நூலும் வெளியிடப்பட்டன.