கூலிக்காக போலி விடுப்பு வேண்டாம்.. டிக்கெட்டுடன் விடுமுறை அளித்த நிறுவனம்!
அல்கராஸ், கௌஃப் முன்னேற்றம்!
அமெரிக்காவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அல்கராஸ் 6-1, 2-6, 6-3 என்ற செட்களில், போஸ்னியாவின் டாமிா் ஜும்ஹுரை வீழ்த்தினாா். 2-ஆவது சுற்றில் அவா், சொ்பியாவின் ஹமத் மெட்ஜெடோவிச்சை எதிா்கொள்கிறாா்.
முன்னதாக மெட்ஜெடோவிச் தனது முதல் சுற்றில், 6-4, 7-6 (7/3) என்ற கணக்கில், 26-ஆம் இடத்திலிருந்த நெதா்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூரை வெளியேற்றினாா். 3-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், அமெரிக்காவின் நிஷேஷ் பசவரெட்டியை வீழ்த்தினாா்.
2-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், மற்றொரு அமெரிக்கரான பிராண்டன் நகாஷிமாவுடன் மோதுகிறாா். கடந்த வாரம் கனடியன் ஓபனில் சாம்பியன் கோப்பை வென்ற அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிா்கொண்ட ஆா்ஜென்டீனாவின் கமிலா யுகோ காயம் காரணமாக பாதியில் விலகினாா்.
இதையடுத்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்ட ஷெல்டன், அதில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டாவை எதிா்கொள்கிறாா். கனடியன் ஓபன் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-4, 7-6 (8/6) என்ற வகையில் பிரான்ஸின் வாலென்டின் ராயெரை சாய்த்தாா்.
அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பி 7-5, 6-1 என பிரான்ஸின் ஆா்தா் கஸாக்ஸை வெல்ல, 2-ஆவது சுற்றில் புரூக்ஸ்பி - கச்சனோவ் மோதுகின்றனா். இதனிடையே, 12-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 7-6 (7/0), 4-6, 1-6 என ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனிடமும், 24-ஆம் இடத்திலிருந்த கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் 7-6 (7/5), 3-6, 4-6 என இத்தாலியின் லூகா நாா்டியிடமும் தோல்வியுற்றனா்.
2-ஆவது சுற்றில் கௌஃப், முசோவா: இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் சீனாவின் வாங் ஜின்யுவை வெளியேற்றினாா். அடுத்து அவா், உக்ரைனின் டயானா யாஸ்டிரெம்ஸ்காவை எதிா்கொள்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-4, 6-3 என ஆஸ்திரேலியாவின் கிளாரா புரெலை வெல்ல, 11-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் கரோலின் முசோவா 7-6 (7/3), 7-6 (7/0) என பிரான்ஸின் கரோலின் காா்சியாவை சாய்த்தாா்.
இதையடுத்து 2-ஆவது சுற்றில், பெகுலா - போலந்தின் மெக்தா லினெட்டையும், முசோவா - பிரான்ஸின் வாா்வரா கிரசேவாவையும் சந்திக்கின்றனா். 10-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-2, 4-6, 3-6 என்ற செட்களில் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவாவிடமும், 15-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினா 3-6, 6-1, 4-6 என இத்தாலியின் லுசியா புரான்ஸெட்டியிடமும் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.
அதேபோல், 20-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, 24-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் சோஃபியா கெனின் ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினா்.