அவள் விருதுகள்: `மனிதத்தின்மீது நம்பிக்கை இழந்து இருந்தேன்; ஆனால்..!' - நெகிழ்ந்த முன்னாள் நீதிபதி
சென்னையில் வெள்ளிக்கிழமை(8/11/2024 )அன்று அவள் விகடன் சார்பில் அவள் விருதுகள் 2024 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழன்னை விருது மாதர் சங்கத்தின் திருமதி உ.வாசகி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார் ஓய்வு பெற்ற முன்னாள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி இரா தாரணி அவர்கள். பெரிய எதிர்பார்ப்புகளின்றி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கண்டுகளித்த அனுபவங்களை நெகிழ்வுடன் பகிர்கிறார் .
"இதுபோன்ற நிகழ்வுகளில் நான் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும்.எனவே நிகழ்ச்சி இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆகவே அமைந்தது. தற்போதைய சூழலில் பல பெண்கள் சாதித்து வந்தாலும், இன்றும் பெண்களின் மீதான அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் பலரும் வாழ்வில் முன்னேற போராடிக் கொண்டிருக்கின்றனர். அதுபோன்ற சாதனைப் பெண்களைக் கண்டறிந்து, ஊக்குவித்து, கௌரவிப்பது என்பது மிகவும் பாராட்டிற்குரிய விஷயமாகும். அதை அவள் விகடன் மிகவும் சிறப்பாக செய்து, அவள் விருதுகள் 2024 நடத்திய விதம் என் மனதை கவர்ந்தது. இனி இது போன்ற நிகழ்வுகளை தவறவிடக்கூடாது என்ற எண்ணம் தோன்றியுள்ளது. பாரா ஒலிம்பிகில் சாதனை நிகழ்த்திய சிங்கப்பெண் சிறுமிகளும், அரசுப்பள்ளி குழந்தைகளுக்காக சேவை செய்யும் ஆசிரியையும், ஆயி பூரணம் அம்மாவையும் சந்திக்க நேர்ந்த போது "வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்" ஒரு மேம்போக்கான வாழ்க்கையை வாழகிறேனோ என்ற எண்ணம் எழுந்தது .
சிங்கப்பெண்கள் விருது வாங்கிய பாராஒலிம்பிக் சாதனை பெண்கள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்தியா ஸ்ரீ சிவன் ஆகியோரின் சாதனைகள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அரங்கத்தில் உள்ள அனைவரிடத்திலும் அவர்கள் காட்டிய பணிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. உடலின் குறை தடையல்ல, என மன உறுதியுடன் போராடி பல வெற்றிகளைப் பெற்று ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கி சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர்கள் சிங்கப்பெண்களே.
கல்வித் தாரகை விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை சசிகலா தனது மாத வருமானத்தில் அரசு பள்ளியில் லைப்ரரி உள்ளிட்ட வசதிகளைச் செய்ததுடன், தன் சம்பளத்தில் 2 ஆசிரியர்களை நியமித்து அரசுப்பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறார். தனக்கென வாழா பிறருக்கு உரியவர் அவர். அவரின் முயற்சியால் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியைகள் பள்ளிகளில் சுடிதார் அணிந்து வரலாம் என்ற அரசாணையை அரசால் வெளியிடப்பட்டது சிறப்பு.
கொடிக்குளம் பள்ளி மாணவர்களுக்கு ஆயி பூரணம் அம்மாள் பல உதவிகளை செய்து தர்ம தேவதை விருது வாங்கிய தருணத்தில் , தங்கள் பங்கிற்கு பூரணம் அம்மாளுக்கு புடவை ஒன்றைப் பரிசளித்து நெகிழ வைத்தனர். ஒரு மகளை இழந்த ஆயி அம்மாளுக்கு இன்று ஆயிரக்கனக்கான குழந்தைகள். யாரும் எதிர்பாராத நிகழ்வாக இறந்த தன் மகள் ஜனனி சிலையை விகடன் மேடையில் ஆயி பூரணம் அம்மாவுக்கு வழங்கிய நிகழ்வு, என்னை கண்கலங்க வைத்தது. அவையில் இருக்கும் அனைவரும் கண்கலங்கினர். இந்த உணர்ச்சி பெருக்கியில் இருந்து வெளியே வரவே எனக்கு சற்று நேரம் தேவைப்பட்டது என்பது நிதர்சனமான உண்மை. இது விகடனின் ஸ்பெஷல்.
ஆயி பூரணம் அம்மாளை நிகிழ வைத்த அவள் விகடனை மண்பாண்ட கலைஞர்கள் விகடன் தாத்தா மண் சிலை மூலம் நிகழ வைத்தனர்.
தினமும் ஆவடியிலிருந்து 147c பஸ்ஸில் பயணித்து மகன் ப்ரக்யானந்தா விற்கு கோச்சிங் கொடுத்ததுடன் மகனுடன், சேர்ந்து 33 நாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலும் எந்த நாட்டையும் சுற்றிப் பார்த்திராத தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் , பெஸ்ட் மாம் விருது வாங்கிய நாகலட்சுமி அவர்கள்.
வெளிச்சத்திற்கு வர விரும்பாமல் பின் இருந்து தன் மகனை அவையகத்தில் முன்னிருக்கச் செய்யும் ப்ரக்யானந்தாவின் தந்தை அவர்களுக்கும் என் வாழ்த்துக்களும் வணக்கங்களும் . இருவரில் யாரைப் புகழ்வது என்றே தெரியவில்லை. குடும்பம் கஷ்டத்தில் இருந்தாலும் பிள்ளைகள் தங்களின் இலட்சியத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற போராட்டத்தைப் பார்க்கும்பொழுது இது போன்ற உள்ளங்களும் சமுதாயத்தில் உள்ளனர் என்ற பெருமை ஏற்பட்டது. அவர்களின் தியாகம் சொல்லிலடக்க இயலாது.
பல்வேறு தளங்களிலும் சாதனைப் பெண்களை இனம் கண்டு அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அவள் விகடனின் பணியைப் பாராட்டுகிறேன். இந்த நிகழ்ச்சிக்காக அவள் விகடன் குழுவின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Evergreen தலைப்பில் நடிகை சிம்ரனுக்கு விருது வழங்கும் போது ஒரு சிறுமியை பின்னணி இசை இல்லாமல் ஆட வைத்து அது என்ன பாடல் என்று கண்டு பிடிக்கச் சொல்லி குறும்பு செய்த விகடன், ஆயி பூரணம் அம்மாளின் மகளின் சிலையைப் பரிசளித்து கலங்கவும் வைத்தது. இதுபோன்று விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தாண்டி விகடனின் பலவிதமான பரிணாமங்களும் இந்நிகழ்ச்சியில் தெளிவாக தெரிந்தது. சமுதாயத்தை அணுகும் விதம் ,வாழ்க்கையின் மீதான பார்வை என அனைத்தும்.
ஒரு பத்திரிகைக்கான குறும்புத்தனமும் அறிவு சார்ந்த விஷயங்களும் , புத்திக்கூர்மை, அர்ப்பணிப்பு, விருந்தோம்பல் என அனைத்திலும் விகடன் என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது. அனைத்தையும் இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமே நான் நன்றாக தெரிந்து கொண்டேன். இதற்குப் பின் உள்ள ஒவ்வொருவரின் உழைப்பும் விலைமதிப்பற்றது.
33 ஆண்டுகளாக நீதித்துறையில் மனிதத் தவறுகளைக் கையாண்டு மனிதர்களின் மறுபக்கத்தைப் பார்த்து மனிதத்தின் மீது நம்பிக்கையை இழந்து இருந்தேன். விகடன் விருதுகள் விழா சாதனைப் பெண்களையும் அவர்கள் கடந்து வந்த பாதையையும் வெளிச்சமிட்டு காட்டியது. இது இச்சமுதாயத்தின் மீதான பார்வையை மாற்றி , இவ்வளவு நல்லுள்ளங்கள் உள்ளன என்று என்னை நெகிழ வைத்தது" இவ்வாறு அவர் கூறினார்.
மாண்புமிகு நீதிபதி இரா தாரணி அவர்கள் 1991 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிபதியாக பதவியேற்றார். 2023 -ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஆறாண்டுகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியாக சிறப்பாக செயலாற்றினார். நீதித்துறையில் 32 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். தற்போது தமிழ்நாடு சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவராக உள்ளார்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88