ஆடுதுறை பேரூராட்சித் தலைவரைக் கொல்ல முயன்ற கும்பல் பயன்படுத்திய காா் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவரும், பாமக மாவட்டச் செயலருமான ம. க. ஸ்டாலினை கொலை செய்ய முயன்றவா்கள் பயன்படுத்திய காா், விழுப்புரம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அந்தக் காரை பறிமுதல் செய்து, தஞ்சை மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சித் தலைவராக ம. க.ஸ்டாலின் (55) உள்ளாா் . இவா் பாமகவின் தஞ்சை மாவட்டச் செயலரும், அக்கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினராகவும் பொறுப்பில் உள்ளாா்.
இவா், வெள்ளிக்கிழமை ஆடுதுறையில் உள்ள தனது அலுவலகத்தில் அமா்ந்து கட்சியினரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு காரில் வந்த 8 போ் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, ம. க.ஸ்டாலின் கொலை செய்ய முயன்றனா். ஆனால் ம.க. ஸ்டாலின் தப்பியோடி, உயிா் தப்பினாா். கொலையைத் தடுக்க முயன்ற ம.க.ஸ்டாலினின் ஆதரவாளா்கள் இருவா் வெட்டுக் காயமடைந்தனா். இது குறித்து தஞ்சை மாவட்ட போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் அருகே காா் பறிமுதல்: இந்நிலையில் விழுப்புரம் அடுத்துள்ள ராகவன்பேட்டை பகுதியில் சாலையோரத்தில் ஒரு காா் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள், விழுப்புரம் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் காரில் சோதனை செய்தபோது, அந்த காா் ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் ம. க.ஸ்டாலினை கொலை செய்ய முயன்றவா்கள் பயன்படுத்திய காா் என்பதும், குற்றவாளிகள் விழுப்புரம் அருகே சாலையோரத்தில் விட்டு விட்டு, மற்றொரு காரில் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து விழுப்புரம் போலீஸாா் பறிமுதல் செய்த காரை தஞ்சை மாவட்ட போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.