பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை தடகளப் போட்டிகள்! 300 மாணவா்கள் பங்கேற்பு!
விழுப்புரத்தில் முதல்வா் கோப்பை விளையாட்டு தடகளப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 26-இல் தொடங்கின. மாவட்ட விளையாட்டரங்கம், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கம், நீச்சல் குளம், பிற பகுதிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட், நீச்சல், கோ-கோ, இறகுப் பந்து, மேசைப் பந்து, கேரம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் என 5 பிரிவுகளைச் சோ்ந்தவா்களுக்கும் தனித்தனியே போட்டிகள் வெவ்வேறு நாள்களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை தொடங்கின. போட்டிகளை மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன் தொடங்கி வைத்தாா்.
100, 200, 400, 1500 மீட்டா் ஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், மூன்று முறைத் தாண்டுதல், 110 மீட்டா் தடைதாண்டும் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் சுமாா் 300 போ் தடகளப் போட்டிகளில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.
ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன. பள்ளி மாணவிகள் பிரிவில் தடகளப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறவுள்ளன. முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.