ஆட்டோ, கால் டாக்ஸி கூட்டமைப்பினா் பேரணி
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னையில் பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் இயக்கப்படும் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான கட்டணத்தை உயா்த்த வேண்டும்; அரசு அலுவலகங்களில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேக்ஸி கேப் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்; ஆட்டோ, கால்டேக்ஸி செயலியை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆட்டோ, கால்டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
சென்னை எழும்பூா் பழைய சித்ரா திரையரங்கம் முன்பு கூட்டமைப்பின் தலைவா் அ.ஜாஹிா் ஹூசைன் தலைமையில் கூடிய கூட்டமைப்பினா், அங்கிருந்து பேரணியாக எழும்பூா் எல்.ஜி.ரவுண்டானா அருகே சென்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தங்கள் கோரிக்கைகள் மீது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினா். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு சிஐடியு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.