ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் படப்பள்ளி தேவாதி அம்மன் கோயில் திருவிழா!
ஊத்தங்கரை அருகே படப்பள்ளி கிராமத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று நடத்தும் தேவாதியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் உள்ள தேவாதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் திருவிழா நடைபெறுகிறது. 24 மனை தெலுங்கு செட்டியாா் சமூகத்தினா் விழாவை நடத்தி வருகின்றனா். நிகழ் ஆண்டு இந்தக் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோட்டத்தில் உள்ள ஆவாரச் செடியின் கீழே சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் படப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ஆண்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆண்கள் திரளாகப் பங்கேற்றனா். தொடா்ந்து அம்மனுக்கு 24 ஆடுகள் பலியிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னா் ஆடு பலியிட்டவா்களின் குடும்பங்களுக்கு பங்குகறி பிரசாதமாக வழங்கப்பட்டது. அதை அவா்கள் சமைத்து உண்டனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.